சென்னை
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று குடியரசு தின விழாவின் நிறைவாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. இது தொடர்பாக கேட்டதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காதது தொடர்பாக தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தொடர்ந்து பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தி.மு.க எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ``ஒரு அரசாணையைக்கூட படித்துத் தெரிந்துகொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும். இல்லை இவர்கள் தமிழக அரசைவிட மேம்பட்டவர்களா?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்க மறுப்பது விதிமீறல் மட்டுமல்ல, மாநிலத்தின் தாய்மொழியை அவமதிப்பதும் ஆகும். இது கடும் கண்டனத்துக்குரியது. நிகழ்ந்த சம்பவத்திற்கும், இனிமேல் இதுபோல் நடக்காமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். #தமிழுக்கு_தலைவணங்கு’ என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது யாராக இருந்தாலும் எழுந்து நிற்க வேண்டியது கட்டாயமே என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். தேவையில்லாத வாதங்களை முன்வைத்து, நம் தாய்க்கு ஒப்பான தமிழ் மொழியின் மரியாதையை குலைக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னை ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்ததைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில் நாளை காலை 11 மணியளவில் ‘ரிசர்வ் வங்கி முற்றுகை’ போராட்டம் நடைபெற உள்ளது.