காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மியம்பட்டி ஆண்டிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (வயது 32). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், மிலன் (7), நிதன் (5) என்ற மகன்களும் உள்ளனர். அலெக்ஸ் பாண்டியன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக மணிப்பூரில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி 40 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இன்றுடன்(வெள்ளிக்கிழமை) விடுமுறை முடிய உள்ள நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அலெக்ஸ் பாண்டியன் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கையில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளது ெதரியவந்தது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் விசாரித்து வருகிறார்.