திருச்செந்தூர்:
திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 29). இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
மிரட்டி செல்போன் பறிப்பு
சம்பவத்தன்று பணி முடித்து மாலையில் வீடு திரும்பினார். சங்கிவிலை- குமாரபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அங்கு வந்த வீரபாண்டிய பட்டணம் முத்து நகரை சேர்ந்த நம்பிராஜன் (வயது24), வெங்கடேஷ் இருவரும் சேர்ந்து சந்தனகுமாரை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
அவரிடம் பணம் இல்லாததினால் அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்றனர். இது தொடர்பாக திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நம்பிராஜன், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.