விழுப்புரம்:
விழுப்புரத்தில் சலவை தொழிலாளி ஒருவரின் தள்ளு வண்டியில் கடந்த 15ஆம் தேதி போர்வையால் மூடிய நிலையில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் உயிரிழந்து கிடந்துள்ளான். சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவனை அடையாளம் காண தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சிறுவன் குறித்து எந்தவிதமான தகவலும் கிடைக்காத நிலையில், அவன், ஆந்திரா அல்லது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இரண்டு தனிப்படைகள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு விரைந்துள்ளன.
சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும், சிறுவனின் குடலில் 2 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் பசி, பட்டினியால் உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.