கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை வனப்பகுதிக்குள் அமைந்துள்ள பேரிஜம் ஏரியை சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் கண்டு ரசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இதனால் கொடைக் கானலில் பேரிஜம் ஏரி உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன. அதன்பின்னர் யானைகள் முகாமிட்டதால் மீண்டும் ஏரி மூடப்பட்டது. இந்த நிலையில் வனத் துறையினர் நடவடிக்கைக்கு பின்னர் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தினசரி 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதற்காக ரூ.200, ரூ.300 என கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
ஆனால் அப்பகுதியில், குடிநீர் வசதிகள், குழந்தைகளுக்கான உணவு, குளிருக்கு இதமான சூடான பானங்கள் கொண்ட சிற்றுண்டி வசதிகள் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
மேலும் பெண்கள் மற்றும் முதியவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிவறையும், சுகாதாரம் இல்லாமல் உள்ளதாக, சுற்றுலா பயணிகள் புகார் கூறுகின்றனர். நகரில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து, பேரிஜம் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விடுவதால், அங்கு பயணிகள் கொண்டு வரும் திண் பண்டங்களையும் குரங்குகள் பறித்து கொண்டு செல்கின்றன.
எனவே பேரிஜம் ஏரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.