தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் சின்னசாமி நாயுடு தெருவைச் சேர்ந்தவர் நீலமேகம். இவரது மனவைி சகுந்தலா. இவர்களது மகன் கார்த்திகேயன் (வயது38). இவருக்கும் ரேணுகா என்ற பெண்ணிற்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அப்போது கார்த்திகேயன் பெண் வீட்டாரிடம் எந்த வரதட்சணையும் வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து ரேணுகாவுக்கு அவரது பெற்றோர்கள் 8 பவுன் நகை போட்டு திருமணத்தை நடத்தி முடித்தனர்.
இதைத்தொடர்ந்து திருமணமான புதியதில் ஒரு மாதம் கணவன்-மனைவி இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். அதன்பின்னர் கார்த்திகேயன் தனது மனைவி ரேணுகாவிடம் 25 பவுன் நகை கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரேணுகா பினாயில் குடித்து விட்டார். உடனே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேணுகாவின் பெற்றோர்கள் கார்த்திகேயனிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில் ரேணுகாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனால் 5 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்க பணம் கொடுத்ததால் தான் குழந்தையை ரேணுகாவின் பெற்றோர்கள் பார்க்க அனுமதிப்பதாக கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அவர்கள் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நகையும், வெள்ளி கொலுசையும் அணிவித்தனர். இதுபோதாது என்று கூறி ரேணுகாவிடம் கார்த்திகேயன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரேணுகா வீட்டை விட்டு வெளியேறி வந்துவிட்டார்.
இதுகுறித்து ரேணுகா அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் கார்த்திகேயன், அவரது தந்தை நீலமேகம், தாய் சகுந்தலா மற்றும் உறவினர்கள் பேபி, கதிர் ஆகியோர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.