விபத்து 
உள்ளூர் செய்திகள்

சரக்கு வேன் மீது மோதிய ஆம்னி பஸ்- ராணுவ வீரர் பலி

ஆரல்வாய்மொழி அருகே சரக்கு வேன் மீது ஆம்னி பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மாலை மலர்

ஆரல்வாய்மொழி:

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாபுரத்தை அடுத்த கலிங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகன் சுரேஷ் (வயது 40), ராணுவ வீரர். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

கலிங்கராஜபுரம் பகுதியில் உள்ள பூதத்தான் கோவிலில் கொடைவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவிற்கு தேவையான பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்காக சுரேஷ், அவரது நண்பர் குமாரசாமி மகன் முருகன் (40) மற்றும் விசுவம்பரம் (60) ஆகியோர் சரக்கு வேனில் நெல்லை மாவட்டம் காவல்கிணறு சென்றனர்.

அங்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு நள்ளிரவில் ஊருக்கு புறப்பட்டனர். குமரி நெல்லை எல்லையான முப்பந்தல் அருகே வேன் வந்தபோது, எதிரே நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் வந்தது.

எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்னி பஸ்சும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

விபத்து நள்ளிரவு நேரம் நடந்ததால் முதலில் யாருக்கும் தெரியவில்லை. அதன்பிறகு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆரல்வாய்மொழி போலீசாரும் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராணுவ வீரர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர் முருகன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இவர் மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வந்தார். அவருக்கு திருமணமாகி உமா மகேசுவரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பாக ஆம்னி பஸ் டிரைவர் பாலகிருஷ்ணன் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுப்பையாபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.