திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி பேரூராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட கானாக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான 3 ஏக்கர் பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் கடந்த 3 மாதங்களாக கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கொட்டப்பட்ட ஓரிரு நாட்களிலேயே இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திருமுருகன்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினர் கடையடைப்பு, மாநகராட்சி குப்பை லாரிகள் சிறைபிடிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மாநகராட்சி குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி திருமுருகன்பூண்டி பேரூராட்சி அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் இன்று அம்மாபாளையத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. அதன்படி இன்று காலை அம்மாபாளையம் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்தப் பாறைக்குழியில் வீட்டுக் கழிவுகள் மட்டுமல்லாமல் இறந்த நாய், பூனை, கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகள் இருப்பதால் கடுமையான துர்நாற்றமும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் முதல் மாவட்ட கலெக்டர் வரை இப்பிரச்சினை குறித்து தெரிவித்து விட்டோம். ஆனால் சமாதானம் மட்டுமே செய்கிறார்கள். பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் மாநகராட்சி குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.