விழுப்புரம்:
திண்டிவனத்தில் இருந்து இன்று காலை தாம்பரம் நோக்கி 20 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் சென்றது. திண்டிவனம் சாரம் மேல்பேட்டை அருகே பஸ் வந்தபோது பஸ்சின் முன்னால் வேன் சென்றது. இந்நிலையில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வேன் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மேல் சேவூர் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் பூச்சிகுளத்தூர் சுந்தரி ,மாமண்டூர் சாந்தி ,ஈச்சூர் விசாலாட்சி, சத்தியவாடி குமாரி உள்ளிட்டோர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பாதிக்கப்பட்ட போக்குவரத்தை சரி செய்தனர். போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.