உள்ளூர் செய்திகள்

கோவையில் பெண்ணை தாக்கிய வாலிபர்

வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மறுத்ததால் தாக்கினார். போலீசார் ெபண்ணை தாக்கியதாக ராமதாசை கைது செய்தனர்.

கோவை,

கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையம் கந்தவேல் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி ஜெயந்தி (வயது 48). மில் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதற்காக வந்தார். அவர் ஜெயந்தியிடம் வந்து வீட்டு உபயோக பொருட்களை வாங்குமாறு வற்புறுத்தினார்.

ஆனால் அவர் வாங்க மறுத்து வாலிபரை வெளியே செல்லுமாறு கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் ஜெயந்தியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து அவர் பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்கள் வாங்க மறுத்த பெண்ணை தாக்கிய கோவைப்புதூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்த ராமதாஸ் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT