ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி(வயது 33). விவசாயி. இவரது மனைவி ராமலெட்சுமி.
முத்துமாரிக்கு சொந்தமான வயல் அப்பகுதியில் உள்ளது. அங்கு நெல் நடவு பணிகள் நடைபெற்று வருவதால் அதனை முத்துமாரி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தடுமாறி விழுந்தார்.
இந்நிலையில் இரவு வெகுநேரமாகியும் அவரை காணாததால் அவரது மனைவி வயலுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் முத்துமாரி பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதுதொடர்பாக அவரது உறவினர்கள் ஆலங்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், முத்துமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.