உள்ளூர் செய்திகள்

நாசரேத் அருகே 5 மாதங்களுக்கு முன்பு மாயமானவர் எலும்புக்கூடாக மீட்பு

பாபு சங்கர் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி மாயமானார்.செருப்பை வைத்துகடந்த 5 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பாபு சங்கரின் எலும்புகள் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

நாசரேத்:

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கீழ தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பாபுசங்கர்(வயது 39).

மாயம்

தினமும் மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்த பாபு சங்கர் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி மாயமானார். இதுதொடர்பாக நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மூக்குப்பீறி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மனித எலும்பு கூடு கிடப்பதாக நாசரேத் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு செருப்பு ஒன்றும் கிடந்தது.

அடையாளம் தெரிந்தது

தூத்துக்குடியில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு எலும்புகள் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கிடந்த செருப்பை வைத்து விசாரணை நடத்தியதில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பாபு சங்கரின் எலும்புகள் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் எதற்காக அங்கு சென்றார்? மதுபோதையில் அவர் இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT