திண்டுக்கல் அறிவுத்திருக்கோவில் ராமசாமி நகரில் வசித்து வருபவர் அருள்ஆரோக்கியதாஸ். வக்கீலாக உள்ளார். இவர் தனது வீட்டைபூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வீட்டின் பூட்டைஉடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 10 பவுன் தங்கநகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அருள்ஆரோக்கியதாசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து அவர் சென்னையில் இருந்து வீடு திரும்பி கொண்டிருக்கிறார். அவர் வந்தபிறகுதான் எவ்வளவு நகை மற்றும் பணம் கொள்ளைபோனது என்ற முழுவிபரம் தெரியவரும். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் 7-வது தெருவில் வசித்து வருபவர் ராஜகோபால். கல்லூரி பேராசிரியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். இதனைநோட்டமிட்ட கொள்ளையர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பீரோவில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து நகர் மேற்கு போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எம்.வி.எம். நகரில் உள்ள வக்கீல் வீனஸ் என்பவரது வீட்டின் கதவையும் உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். ஆனால் அங்கு நகை-பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஒரேநாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்களை பதிவு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நேற்று பள்ளி ஆசிரியை வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை யடிக்கப்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் 2 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.