கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

டிரைவர் கொலையில் மேலும் 2 பேர் கைது

பெரியகுளம் டிரைவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

பெரியகுளம்:

தேனி மாவட்டம்  பெரியகுளம் அருகில் உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் போத்திராஜன் (வயது37). ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வடுகபட்டி புறவழிச் சாலையில் உள்ள பாலத்துக்கு அடியில் இறந்து கிடந்தார்.

இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் போத்தி ராஜன் குடிபோதையில் அடித்து நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைய டுத்து கொலை வழக்கமாக மாற்றிய  தென்கரை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

பெரியகுளம் டி.எஸ்.பி. முத்துக்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர்  (பொறுப்பு) சுகுமாறன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த போத்திராஜாவின் நண்பரான வீரமுத்து (36) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தாங்கள் 2 பேரும் பாலத்தில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்ததாகவும், தங்களுக்குள் ஏற்பட்ட தகராறால் போத்திராஜாவை அடித்து பாலத்தில் இருந்து கீழே தள்ளி விட்டதாகவும் அதன் பின்பும் பிழைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் நீரில் மூழ்கடித்து கொலை செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே வீரமுத்துவை கைது செய்த நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்த அவர்களது நண்பர்களான ரஞ்சித்குமார் (22), ராஜா (40) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.