கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பி.நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மகன் ஜனார்த்தனன் (வயது 24). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைப் பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் வீட்டு கதவை தட்டி மது கேட்டு சத்தம் போட்டுள்ளார். அப்போது கதவை திறந்து வெளியில் வந்த ராதாகிருஷ்ணன் தற்போது நான் மது விற்பது இல்லை என்று கூறிவிட்டு மீண்டும் கதவை பூட்டினார்.
ஆனால் ஜனார்த்தனன் அடிக்கடி மது கேட்டு ராதாகிருஷ்ணன் வீட்டு கதவை தட்டி தொந்தரவு செய்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணனின் மகள் காவியா (19) வீட்டில் இருந்த கொதிக்கும் வெந்நீரை பாத்திரத்தில் எடுத்து வந்து ஜனார்த்தனன் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் அவரது முகம் மற்றும் உடலில் பல பகுதிகளில் வெந்நீர் பட்டு வெந்ததால் வலியால் அலறி துடித்தார்.
இதையொட்டி அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணன், அவரது மகள் காவியா ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.