கைது 
செய்திகள்

வலங்கைமான் அருகே முன்விரோதத்தில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து- 6 பேர் கைது

வலங்கைமான் அருகே முன்விரோதத்தில் 2 வாலிபர்களை கத்தியால் குத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த திருவோணமங்கலம் பெரிய தெருவை சேர்ந்தவர் செல்லையன். அதே பகுதியை சேர்ந்த செல்வமணி மகன் ஹரிஷ் (வயது25). இருவருடைய குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹரிஷ் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த பிரதீப் (24) என்பவருடன் தனது வீட்டுக்கு அருகே நின்று கொண்டு பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்லையன் மற்றும் அவரது உறவினர்கள் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு ஹரிஷ் மற்றும் பிரதீப் ஆகியோரை கத்தியால் குத்தினர்.

இதில் படுகாயம் அடைந்த ஹரிஷ் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும், பிரதீப் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லையன் (50), அவரது உறவினர்கள் கேசவன் (25),இளையராஜா (25), சக்திவேல் (40), விஜயேந்திரன் (32), மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.