செய்திகள்

ஆசிய தடகள போட்டி: வட்டு எறிதல் வீரர் விகாஸ் கௌடா பங்கேற்க அனுமதி

புவனேஸ்வரில் நடைபெற உள்ள ஆசிய தடகள போட்டியில், இரண்டு முறை சாம்பியனான விகாஸ் கௌடா பங்கேற்க தேசிய விளையாட்டு சம்மேளனம் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி:

ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆசிய தடகள போட்டிகள் வரும் நாளை தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கணைகள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த 95 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் சில வீரர்கள் சோதனைக்கு பிறகே கலந்து கொள்ள அனுமதிக்கபடுவார்கள் என தேசிய விளையாட்டு சம்மேளனம் அறிவித்திருந்தது.

அதன்படி உடல் தகுதி சோதனைகள் கடந்த ஞாயிறு அன்று கலிங்கா மைதானத்தில் நடைபெற்றன. இச்சோதனையில் வட்டு எறிதலில் இரண்டு முறை தங்கபதக்கம் வென்ற விகாஸ் கௌடாவும் கலந்து கொண்டார். அவர் கடந்த 2013 மற்றும் 2015 ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டிகளில் முறையே 64.90மீ மற்றும் 62.03மீ எறிந்து தங்கபதக்கம் வென்றார். 

ஆனால், தற்போது அவரால் சுமார் 58 மீட்டர் மட்டுமே வீச முடிவதால் அவரால் பதக்கம் வெல்ல முடியாது என சில இந்திய பயிற்சியாளர்கள் தெரிவித்ததை அடுத்து அவர் சோதனையில் பங்கேற்க அறிவுருத்தப்பட்டிருந்தார். இச்சோதனையில் அவர் வெற்றி பெற்றதை அடுத்து அவர் பிரதான சுற்றில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் 110 மீட்டர் தடையோட்டத்தில் பங்கேற்கும் சித்தாந்த் திங்கலயாவும் சோதனையில் வெற்றி பெற்றுள்ளார். இவர்களை தவிர நீளம் தாண்டும் வீரர்களான சித்தார்த் மோகன் நாயக் மற்றும் நயனா ஜேம்ஸ், மும்முறை தாண்டுதல் வீரர்களான கார்த்திக் உன்னிகிருஷ்ணன் மற்றும் ஜாய்லின் லோபோ ஆகியோரும் சோதனையில் கலந்து கொண்டு தகுதி பெற்றதை தொடர்ந்து அவர்கள் ஆசிய தடகள போட்டிகளில் பங்கு பெறலாம் என தேசிய விளையாடு சம்மேளனம் அறிவித்துள்ளது.