செய்திகள்

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு செலவு எவ்வளவு?

ஏர் இந்தியா விமானத்தை பயன்படுத்தி பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாடு பயணம் மேற்கொண்டதில் ஒட்டு மொத்த செலவு உள்ளிட்ட விபரங்களை வெளியிட வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:

மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான லோக்கேஷ் பத்ரா தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில் பிரதமர் மோடி கடந்த 2013 முதல் 2017-ம் ஆண்டு வரை ஏர் இந்தியா விமானம் மூலம் வெளிநாடு பயணம் செய்ததில் ஏற்பட்ட செலவுகள், அதற்காக அந்நிறுவனத்துக்கு அரசு வழங்கிய தொகை, செலுத்த வேண்டிய நிலுவை தொகை, செலவு ரசீதுகள், ஒட்டுமொத்த செலவு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு இருந்தார்.

ஆனால், மத்திய வெளியுறவு அமைச்சகம் முழுமையான தகவல்களை அளிக்கவில்லை. இந்த தகவலை வெளியிட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து, மத்திய தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூரிடம் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பிரதமர் அலுவலகம் செலுத்த வேண்டிய தொகை எதுவும் உள்ளதா? என கேட்டிருந்தேன். நாட்டு மக்களுக்கு இதை தெரியப்படுத்துவது அவசியம் என பத்ரா வாதிட்டிருந்தார்.

இந்த செலவு விவரங்களை வெளியிடுவதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரும் எனக் கூறுவதை ஏற்க முடியாது. நுகர்வோருக்கும், மக்களுக்கும் சேவை அளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அரசு வைத்துள்ள நிலுவைத் தொகையை வெளியிடுவது கடமையாகும் எனவும் பத்ரா தெரிவித்து இருந்தார்.

ஆனால், இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கால கட்டங்களில் உள்ள அதிகாரிகளால் செலவுத்தொகை குறிப்பிடப்பட்டுள்ளதால் அதைத் தேடி வெளியிடுவதில் சிரமம் என்று கூறப்பட்டது.

மத்திய வெளியுறவுத்துறையின் இந்த விளக்கத்தை ஏற்க தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர் மறுத்துவிட்டார். ''பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்துக்கான செலவு விவரங்கள், இந்திய விமானப்படை, ஏர் இந்தியா ஆகியவை தேதி வாரியாக அளித்த பில், செலுத்தப்பட்ட தொகை, மத்திய அரசு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும்.

ஒருவேளை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நிலுவைத் தொகையை செலுத்தி இருந்தால், அதற்குரிய ரசீதுகளின் நகல் ஆகியவற்றையும் மனுதாரருக்கு அளிக்க வேண்டும். இது ஆண்டு வாரியாக 2013 முதல் 2017-ம் ஆண்டுவரை அளிக்க வேண்டும்'' என தெரிவித்தார். #TamilNews

SCROLL FOR NEXT