செய்திகள்

கரிக்கலாம்பாக்கத்தில் ஊனமுற்ற பெண் தூக்குபோட்டு தற்கொலை

கரிக்கலாம்பாக்கத்தில் கணவனின் குடிப்பழக்கத்தால் ஊனமுற்ற பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

புதுச்சேரி:

கரிக்கலாம்பாக்கம் ஸ்ரீதர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் பிளம்பிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும், மங்கலம் வள்ளலார் தெருவை சேர்ந்த ராமையா என்பவர் மகள் சாந்திக்கும் (வயது 31). கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

ஸ்ரீனிவாசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. சாந்தி ஊனமுற்றவர். எனவே, அதற்கான உதவித் தொகை வாங்கி வந்தார். ஸ்ரீனிவாசன் வேலைக்கு செல்லாமல் இந்த பணத்தில் மதுகுடித்து விட்டு வந்துள்ளார். இதனால் கணவன்- மனை விக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சாந்தி ஊனமுற்றோர் உதவி தொகை வாங்கி வந்தார். அந்த பணத்தை ஸ்ரீனிவாசன் மது குடிக்க வாங்கி சென்றார். இதனால் மன வருத்தத்தில் இருந்த சாந்தி நேற்று வீட்டில் சேலையால் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை சாந்தி வெகுநேரமாக வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது சாந்தி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கரிக்கலாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்- இன்ஸ் பெக்டர் பெரியசாமி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாந்திக்கு திருமணம் ஆகி 4 வருடமே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது.