செய்திகள்

திண்டுக்கல் அருகே குடகனாற்றில் மணல் திருடும் கும்பல்

திண்டுக்கல் அருகே குடகனாற்றில் மர்ம கும்பல் மணல் திருடி வருகின்றனர்.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில் குடகனாறு சந்தனவர்த்தினி ஆறு ஓடுகிறது. மழை காலத்தில் ஆற்றில் தண்ணீர் அதிக அளவு இருப்பதால் மணல் எடுக்க முடியாது. தற்போது மழை இல்லாத நிலையில் 2 ஆறுகளும் வறண்டு கிடக்கின்றன.

இதனை பயன்படுத்தி மர்ம கும்பல் டிராக்டர், லாரி, மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி வருகின்றனர். இப்பகுதியில் மணல் அள்ள அரசு அனுமதி பெற்று ஒப்புகைச்சீட்டு வேண்டும். ஆனால் எந்த ஆவணமும் இன்றி மணல் எடுத்து வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குடகனாறு, சந்தனவர்த்தினி ஆறு மூலம் தாடிக்கொம்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தென்னை, கரும்பு, வாழை, நெல் ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

கஜா புயலால் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். அதன் பின்னர் ஓரளவு மழை கை கொடுத்ததால் விவசாய பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது இரவும் பகலுமாக மணல் கொள்ளை நடைபெறுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தேர்தல் பணிகளுக்கு சென்று விட்டதால் ரோந்து பணி மேற்கொள்வதில்லை. பொதுமக்கள் புகார் அளித்தால் மட்டுமே சம்பவ இடத்துக்கு வருகின்றனர். தேர்தல் முடிவதற்குள் அவசரமாக ஆற்றில் மணல் அள்ளி தோட்டங்களில் பதுக்கி வருகின்றனர். எனவே அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி மணல் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.