நீர் முழ்கி பலி 
செய்திகள்

திண்டுக்கல் அருகே வைகை ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி

திண்டுக்கல் அருகே ஆற்று வெள்ளத்தில் மூழ்கி அண்ணன் தம்பி பரிதாபமாக பலியானார்கள்.

மாலை மலர்

கொடைரோடு:

சென்னை பழைய வண்ணாரபேட்டையைச் சேர்ந்தவர் மாரியப்பன். ஜவுளி வியாபாரி. இவரது மகன்கள் ஜெகன் (வயது 36), குமரேசன் (32). இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக சென்னையிலேயே வசித்து வருகின்றனர். தந்தைக்கு உதவியாக சகோதரர்கள் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். இவர்களது பூர்வீகம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலப்பட்டி கிராமம் ஆகும்.

இந்த நிலையில் மாரியப்பன் தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். கன மழை காரணமாக வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

வைகை ஆற்றில் குளித்து விட்டு பின்னர் சாமி தரிசனம் செய்வதற்காக உறவினர்கள் அனைவரும் அங்கு வந்தனர். அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 பெண்கள் திடீரென நீரில் மூழ்கத் தொடங்கினர். அவர்களை காப்பாற்றுவதற்காக ஜெகன் மற்றும் குமரேசன் ஆகியோர் வைகை ஆற்றில் குதித்தனர்.

தண்ணீரில் இறங்கி பெண்களை காப்பாற்ற முயன்று கொண்டிருந்த போது அவர்கள் 2 பேரும் கரை ஒதுங்கி பாதுகாப்பாக வெளியேறினர். ஆனால் அவர்களை காப்பாற்ற சென்ற அண்ணன்-தம்பி 2 பேரும் சுழலில் சிக்கி நீரில் மூழ்கினர். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்க முயற்சி செய்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீர் அதிகம் வந்ததால் அவர்களால் மீட்க முடியவில்லை.

இதனால் குடும்பத்தினர் கண் முன்னே ஜெகன் மற்றும் குமரேசன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உடனே இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் அண்ணன் - தம்பி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.