குள்ளனம்பட்டி:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் தூய்மை பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தனியார் கட்டிடங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு இருந்தால் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகர் பகுதியிலும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட வி.டி.பட்டி கிராமம் மேட்டுப்பட்டியில் டெங்கு ஒழிப்பு பணிகள் நடைபெற்றது மண்டல அலுவலர் நளினி ஜெயந்தி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தோணியார், மணிமுத்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு கடை மற்றும் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருந்த 6 வீடு மற்றும் டீக்கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து இதே நிலையில் இருந்தால் 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.