செய்திகள்

திண்டுக்கல்-மதுரை செல்லும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்

திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாலை மலர்

குள்ளனம்பட்டி:

தமிழகத்தில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சிறிதளவு கட்டணம் குறைக்கப்பட்டது. இருந்தபோதும் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தனியார் பஸ்களில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதில் பயணம் செய்ய ஆர்வம் காட்டினர்.

ஆனால் தற்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு செல்லும் தனியார் பஸ்களில் அரசு பஸ்சை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல்லில் இருந்து கொடைரோட்டுக்கு அரசு பஸ்களில் 16 ரூபாயும், தனியார் பஸ்களில் ரூ.20-ம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் வாடிப்பட்டி, சமயநல்லூர் மதுரைக்கும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் பெரும்பாலான பஸ்களில் சின்னாளபட்டி, கொடைரோடு, அம்மையநாயக்கனூர் பகுதி பயணிகளை புறக்கணித்து மதுரை பயணிகளை மட்டும் ஏற்றுகின்றனர். மற்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் புறப்படும் போது ஏறிக்கொள்ளுங்கள் என கூறுகின்றனர்.

சின்னாளபட்டி ஊருக்குள் செல்லாமல் பை-பாஸ் சாலையிலேயே பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் அவர்கள் மற்றொரு வாகனத்தில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து போக்குவரத்து ஆய்வாளரிடம் கேட்டபோது தனியார் பஸ்களுக்கு கி.மீ.க்கு 58 காசுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து கொடைரோடு பகுதிக்கு 25 கி.மீ. இதனுடன் இன்சூரன்ஸ் தொகை ரூ.1 சேர்த்து 16 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து புகார்கள் வரவில்லை. இருந்தபோதும் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.