செய்திகள்

திண்டுக்கல் அருகே தலை துண்டித்த நிலையில் வாலிபர் உடல்: கொலையா? போலீசார் விசாரணை

திண்டுக்கல் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சின்னாளப்பட்டி:

திண்டுக்கல் - மதுரை ரெயில் மார்க்கத்தில் காந்தி கிராம பல்கலைக்கழகம் அருகே சுரங்கப்பாதையில் வாலிபர் ஒருவர் தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் இறந்து கிடந்தவர் செட்டியபட்டி ஊராட்சிக்குட்பட்ட கல்லுப்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் தர்மராஜ் (வயது 25) என தெரியவந்தது. லாரி டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களாக வெளியூரில் இருந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந் நிலையில் அவர் இறந்து கிடப்பதாக அறிந்ததும் உறவினர்கள் அங்கு வந்து கதறி அழுதனர். அவர் ரெயிலில் அடிபட்டு இறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் தலை வெட்டப்பட்டது போல தனியாக வேறொரு இடத்தில் கிடந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.