திண்டுக்கல்:
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பகல் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மாலையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து சேதம் அடைந்து வருகின்றன.
நேற்று மாலை திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. கொடைக்கானலில் இருந்து பாம்பார்புரம் செல்லும் சாலையில் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
இதேபோல் கொடைக்கானல் சுற்றுப்பகுதியில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. பழனியில் சுமார் ½ மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்து காற்று வீசியது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்து உள்ள ஜி.கல்லுப்பட்டியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் வாழை, தென்னை மரங்கள், வேரோடு சாய்ந்தன. சில பகுதிகளில் மின் கம்பிகளும் அறுந்ததால் மின் தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் கம்பிகளை சரி செய்தனர்.