வடமதுரை:
திண்டுக்கல் அருகே வடமதுரை, அய்யலூர், காணப்பாடி கொம்பேறிப்பட்டி, பூசாரிப்பட்டி, புத்தூர் ஆகிய பகுதிகளில் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளர்களே. போதிய அளவு படிப்பறிவு இல்லாததால் நோய்களுக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் அருகில் உள்ள மெடிக்கல் கடையில் மருந்து வாங்குகின்றனர்.
மேலும் வறுமையின் காரணமாக அங்கேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவிய போது போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்தது. அதன் பின்பு மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி அதிகாரிகளின், தீவிர கண்காணிப்பால் ஓரளவு குறைந்தது. தற்போது மீண்டும் போலி டாக்டர்கள் நடமாட்டம் தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோருக்கு தனியாக கிளினிக் கிடையாது. தங்கள் மோட்டார் சைக்கிளிலேயே மருத்துவ உப கரணங்களை வைத்துக் கொள்கின்றனர். ஆங்காங்கே உள்ள டீக்கடை, பெட்டிக் கடைகளில் மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஒரு சிலர் மருந்து கடைக்கு அனுமதி வாங்கி அங்கேயே சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
முறையற்ற உறவால் கர்ப்பமாகும் இளம்பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளையும் இவர்கள் வினியோகிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி உயிர் பலி ஏற்படும் முன்பு போலி டாக்டர்கள் நடமாட்டத்தை கட்டுபடுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.