செய்திகள்

திண்டுக்கல் அருகே மரத்தில் கார் மோதிய விபத்து: மருத்துவ மாணவர் மரணம்

திண்டுக்கல் அருகே இன்று கார் மரத்தில் மோதிய விபத்தில் மருத்துவ மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னிவாடி:

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். டாக்டராக உள்ளார். இவரது மகன் அருண்பாலசந்தர் (25) கோவை மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வந்த அருண்பாலசந்தர் இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு காரில் புறப்பட்டார்.

காரை போடியை சேர்ந்த தேவராஜ் மகன் பிரபு (32) என்பவர் ஓட்டி வந்தார். செம்பட்டி-பழனி சாலையில் கன்னிவாடி அருகே சுரைக்காய்பட்டி என்ற இடத்தில் வந்த போது கார் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின்மீது பயங்கரமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே அருண்பாலசந்தர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து கன்னிவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உயிருக்கு போராடிய டிரைவர் பிரபுவை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச் சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.