பஸ் நிலையத்தில் சுற்றித் திரியும் போதை ஆசாமிகள் . 
செய்திகள்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணிகள், டிரைவர்களை மிரட்டும் போதை ஆசாமிகள்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் டிரைவர்களை மிரட்டும் போதை ஆசாமிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களாக போதை ஆசாமிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பயணிகளிடம் பணம் வாங்கி டாஸ்மாக் கடைகளில் மது குடித்து விட்டு பஸ் நிலையத்திலேயே தூங்கி விடுகின்றனர்.

இரவு நேரத்திலும் பஸ் நிலைய வளாகத்திலேயே அலங்கோலமாக படுத்து கிடக்கின்றனர். சில இடங்களில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் படுத்து கிடப்பதும், அதே இடத்தில் சாப்பிட்டு அசுத்தம் செய்வதும், தினசரி நிகழ்வாக நடந்து வருகிறது.

சில போதை ஆசாமிகள் பஸ் புறப்படும் போது முன்னாள் நின்று கொண்டு டிரைவரை மிரட்டுவதும், பயணிகளை பார்த்து மிரட்டி பணம் கேட்பதும் நடந்து வருகிறது. இவர்களின் தோற்றத்தை பார்த்தாலே குழந்தைகள் பயந்து அழுது விடுகின்றனர்.

இவர்கள் மன நோயாளிகளா? அல்லது போதை ஆசாமிகளா? என தெரியவில்லை. ஆனால் இவர்களின் நடவடிக்கை பொதுமக்களை அச்சுறுத்துவதாக உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சில பிச்சைக்காரர்கள் மற்றும் மன நோயாளிகள் சுற்றித் திரிந்த பஸ் நிலையத்தில் தற்போது ஏராளமானவர்கள் இது போல் சுற்றித்திரிகின்றனர்.

போலீசாரும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளும் இது போன்ற நபர்களை பஸ் நிலையத்தில் இருந்து அகற்றி அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.