செய்திகள்

எந்த நதியில் புனித நீராடினாலும் எடப்பாடி பழனிசாமியால் புண்ணியம் தேட முடியாது: தினகரன்

எந்த நதியில் புனித நீராடினாலும் எடப்பாடி பழனிசாமியால் புண்ணியம் தேட முடியாது என்று தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

திருச்சி:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரி அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் திருச்சியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் இரவு திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவர் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்த விவரம் வருமாறு:-

கே : திருச்சி வந்துள்ள தீபா, தினகரனுக்கு சேர்ந்த கூட்டம் பணத்தால் சேர்ந்த கூட்டம் என்று கூறியுள்ளாரே? .

ப: தீபா எதையாவது சொல்வார். நீட் தேர்வை விலக்க வேண்டும் என்று அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்ற கூட்டம். இதை ஒவ்வொருவரும் உணர்ந்து இருக்கிறார்கள். தீபா கூறு வதையாரும் பொருட்படுத்த வேண்டாம்.

கே: நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை ஏன் கண்டிக்கவில்லை?

ப: மத்திய, மாநில அரசுகளை கண்டித்துதான் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசு தமிழக மக்கள் நலன் பாதிக்காத வகையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தால் தான் 69 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கும்.

கே: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீ க்கம் செய்யப்பட்டதின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

ப: எடப்பாடி பழனிசாமி அரசு நீதிமன்றம் ஒன்று இருப்பதை உணராமல் சபாநாயகர் மூலம் தகுதி நீக்கம் செய்துள்ளார்.

நீதிமன்றத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். நீதி நிச்சயம் வெல்லும். தீர்ப்பு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். ஜனாதிபதியை சந்திப்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றார்.

பின்னர் திருச்சி விமான நிலையத்தில் தினகரன் நிருபர்களிடம் கூறும் போது, நீட்தேர்வால் பாதிக்கப்பட்ட அனிதாவின் மரணம் எல்லோரையும் பாதித்து விட்டது. அந்த உணர்வின் வெளிப்பாடுதான் நேற்று சேர்ந்த கூட்டம். சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்து வாக்களித்தார். அவரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யவில்லை.

முதல்வரை மாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கட்சியை காப்பாற்ற போராடும் போராளிகளான 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ளது ஜனநாயக படுகொலை.

மயிலாடுதுறை மகா புஷ்கர விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புனித நீராடியுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கு துரோகம் செய்த அவர் ராமேசுவரத்தில் குளித்தாலும் சரி, காசியில் குளித்தாலும் சரி, எத்தனை முறை மூழ்கினாலும் தூய்மையாக மாட்டார். அவரால் புண்ணியம் தேடமுடியாது. நதியின் புண்ணியம்தான் கெடும்.

இவ்வாறு அவர் கூறினார்.