சென்னை:
குன்னம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “தினகரன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்த அ.தி.மு.க.,விலிருந்து விலகி வெகுநாட்கள் ஆகிவிட்டது.
ஜெயலலிதா தலைமையில் கட்சியை நடத்திய பொறுப்பாளர்கள் எல்லாம் தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தினகரன் தனிக்கட்சி தொடங்க ஆயத்த பணியை ஆரம்பித்து விட்டார்” என்றார்.
இதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனின் பேச்சு முட்டாள்தனமாக உள்ளது. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்கிற போது தினகரன் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?
அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். இவர்களின் பக்கம்தான் 1½ கோடி தொண்டர்களும் உள்ளனர். எனவே தொண்டர்களை குழப்புவதற்காக குன்னம் எம்.எல்.ஏ. பேசுகிறார்.
எடப்பாடி-ஓ.பி.எஸ். வேண்டுமென்றே சொல்லிக் கொடுத்து தினகரன் கட்சி ஆரம்பிக்க போவதாக பேச வைக்கிறார்கள். இந்த பொய்பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது.
ஒரு மனிதனுக்கு அழிவு காலம் வரும் போது எரியும் மெழுகுவர்த்தி கூட பிரகாசமாக எரியும் என்பார்கள். அது போலத்தான் எடப்பாடி ஆட்சி செயல்படுகிறது.
முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று சொன்னதற்காக 18 எம்.எல்.ஏ.க்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ்.க்கு துணை முதல்வர் பதவி கொடுக்கிறார்கள்.
எனவே இந்த அரசை எப்படி தூய்மையான அரசாக கூற முடியும்? அதனால்தான் இறுதி கட்ட போராட்டத்தில் டி.டி.வி. தினகரன் இறங்கி உள்ளார். வெற்றியும் பெறுவார்.
நீட் நுழைவுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியதாகக் கூறி டி.டி.வி தினகரன், புகழேந்தி உள்ளிட்டவர்கள் மீது தமிழக அரசு உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தமிழக அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது.முடிந்தால் தினகரனை கைது செய்து பார்க்கட்டும். அவர் மீது வழக்கு போட்டு அதன் மூலம் எங்களைப் போன்றவர்களை மிரட்டப் பார்க்கிறார்கள். மக்கள் மத்தியில் அது எடுபடாது.
துண்டு பிரசுரத்தில் தினகரன், புகழேந்தி படம் இருந்ததற்காக வழக்கு போட்டு இருக்கிறார்கள். அந்த துண்டு பிரசுரத்தில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் படமும் இடம் பெற்று உள்ளது. அவர்கள் மீதும் வழக்கு போடுவார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.