செய்திகள்

தினகரன் நவீன கோமாளியை போல செயல்படுகிறார்: அமைச்சர் கே.சி.வீரமணி சொல்கிறார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கும் அதிகாரம் தினகரனுக்கு இல்லை. அவர் நவீன கோமாளியை போல செயல்படுகிறார் என்று கே.சி. வீரமணி கூறினார்.

மாலை மலர்

வேலூர்:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. வேலூர் அடுத்த மேல்மொணவூர் ஐ.டி.ஐ. வளாகத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் கே.சி. வீரமணி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கும் அதிகாரம் டி.டி.வி.தினகரனுக்கு இல்லை. அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

அவர்களுக்கு தலையில் பித்தம் அதிகரித்து விட்டது. அவர்களது தலையில் தேய்க்க லாரியில் எலுமிச்சம் பழங்களை அனுப்பி வைக்க வேண்டும். டி.டி.வி.தினகரன் நவீன கோமாளியை போல செயல்படுகிறார்.

டி.டி.வி. தினகரன் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. எந்த பதவியிலும் இல்லை.அவரை ஜெயலலிதா இருந்த போதே கட்சியில் இருந்து நீக்கி விட்டார். ஆனால் நானே துணை பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு மற்றவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக கூறி தங்கள் முடிவை திணிக்க முயற்சிக்கிறார்கள்.

ஜெயலலிதா இருந்த போதே கட்சி டி.வி.யையும், பத்திரிகையையும் கைப்பற்றிவிட்டனர். அதே போல் கட்சியின் அனைத்தையும் குடும்ப சொத்தாகவே மாற்ற நினைக்கின்றனர்.சசிகலா குடும்பத்தையே தமிழ கமக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

கட்சியில் இல்லாதவர்களை எல்லாம் குறிப்பிட்டு அவர்களுக்கு பொறுப்புகளை தினகரன் அறிவிக்கிறார். அவரை நம்பி சென்ற எம்எல்ஏக்களும், கட்சி பதவியில் நியமிக்கப்படுபவர்களும் ஏதோ பதவி கிடைக்கிறது என்று தான் செல்கிறார்கள்.

ஆனால், உணர்வுப் பூர்வமாக அவர்கள் தினகரன் அணிக்கு செல்ல வில்லை. கட்சிக்கு எதிராகவும் செயல்பட வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.