செய்திகள்

சொகுசு விடுதியில் தங்கியுள்ள ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்திக்க புதுச்சேரி செல்கிறார் தினகரன்

புதுவை சொகுசு விடுதியில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்திக்க இன்று தினகரன் புதுச்சேரி செல்கிறார்.

மாலை மலர்

எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று முன்தினம் இணைந்தன. ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்த இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க் கள் 19 பேர் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

அவர்கள் 19 பேரும் டி.டி.வி.தினகரன் வீட்டில் திரண்டு ஆலோசனை நடத்தினார்கள். பிறகு கவர்னரிடம் சென்று முதல்-அமைச்சர் எடப்பாடிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது.

இதை சரி செய்ய தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி தரப்பினர் இழுக்க கூடும் என தினகரன் கருதினார். எனவே, ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

தமிழ்நாட்டில் தங்க வைத்தால் அரசு மூலம் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என கருதிய அவர் மாற்று கட்சி ஆட்சி நடக்கும் புதுவையில் தங்க வைக்கலாம் என்று முடிவு எடுத்தார். இதற்காக சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள ‘வின்ட் பிளவர்’ ரிசார்ட்டை தேர்வு செய்தனர்.

புதுச்சேரி வின்ட்பிளவர் ஓட்டலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்காக மொத்தம் 20 அறைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. வெற்றிவேல் தவிர, 18 எம்.எல்.ஏ.க்களும் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.

பெண் எம்.எல்.ஏ.க்கள் ஜெயந்தி பரந்தாமன், சந்திர பிரபா, உமா மகேஸ்வரி ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் கணவருடன் வந்தனர். அவர்களுக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மற்ற ஆண் எம்.எல்.ஏ.க்களுடன் நண்பர்கள், உதவியாளர்கள் வந்திருந்தனர்.

அவர்கள் விடுதி உள்பகுதியில் தாராளமாக நடமாடி வருகிறார்கள். விடுதி வாசலில் தனியார் செக்யூரிட்டி பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். அங்கு கெடுபிடி எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

ஆனால், பிரச்சினைகள் ஏற்படலாம் என்று கருதி இன்று காலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்ஸ்பெக்டர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இதற்கிடையே புதுவை சொகுசு விடுதியில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்திக்க இன்று தினகரன் புதுச்சேரி செல்கிறார்.

ஆளுநர் எந்த முடிவும் சொல்லாமல் மும்பை சென்றுவிட்டதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.