செய்திகள்

தினகரன் மீண்டும் கட்சிப்பணி: அமைச்சர்கள் இடையே கருத்து வேறுபாடு

தினகரன் மீண்டும் அரசியல் பிரவேசம் செய்திருப்பது தொடர்பாக அமைச்சர்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் இந்த கருத்து மோதல் அ.தி.மு.க. அம்மா அணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

சென்னை:

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

டெல்லியில் இருந்து இன்று சென்னை  வந்தடைந்த அவர் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக பேட்டி அளித்த தினகரன் கட்சிப் பணிகளை தொடருவேன் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து அ.தி.மு.க. அம்மா அணியில் கருத்து வேறுபாட்டை உருவாக்கியுள்ளது.

அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

தினகரன் விடுதலையானது குறித்து கருத்து தெரிவித்த ஜெயக்குமார் தினகரனை சந்திக்கும் எண்ணம் எதுவும் இல்லை. எடப்பாடி பழனிசாமி அரசை அவர் இயக்குவதாக கூறுவது தவறு என்று கூறியுள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது, தினகரன் கட்சிப்பணியாற்றுவது பற்றி எடப்பாடி பழனிசாமியே முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே உள்ளது.

அமைச்சர் எஸ்.பி.வேலு மணியும் எடப்பாடிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துள்ளார். தினகரன் கட்சி தொடர்வது பற்றி முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியே முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணியின் நிலை குறித்தும் எடப்பாடி பழனிசாமியே முடிவு செய்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில்தான் தினகரன் மீண்டும் அரசியல் பிரவேசம் செய்துள்ளார்.

3 எம்.பி.க்களும், 10 எம்.எல்.ஏ.க்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருக்கும் கருத்துகள் தினகரனுக்கு எதிராக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இப்படி அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டை யன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் எடப்பாடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்திருக்கும் நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

தினகரன் கட்சிப்பணியை ஆற்றுவதற்கும் கட்சியில் தொடர்வதற்கும் எந்த தடையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

தினகரன் மீண்டும் அரசியல் பிரவேசம் செய்திருப்பது தொடர்பாக அமைச்சர்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் இந்த கருத்து மோதல் அ.தி.மு.க. அம்மா அணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே 2 அணிகளாக அ.தி.மு.க. உடைந்திருக்கும் நிலையில் தினகரனின் வருகையால் ஏற்பட்டிருக்கும் இந்த குழப்பம் அ.தி.மு.க. வினர் மத்தியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.