கோப்புப்படம் 
செய்திகள்

கட்டுப்பாட்டு அறைக்கு வரும் நூதன தொலைபேசி அழைப்புகள்- திண்டாடும் போலீசார்

கொரோனா ஊரடங்கால் தினமும் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் நூதன தொலைபேசி அழைப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் போலீசார் திண்டாடி வருகிறார்கள். எனவே அவசர தேவைக்கு மட்டுமே உதவி கேட்க பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாலை மலர்

பெங்களூரு:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெங்களூரு மாநகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள், மருத்துவ உதவிகள் ஆகியவற்றுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதை மீறி சாலைகளில் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்களும், சில சமயங்களில் அவசர உதவி தேவைப்படுபவர்களும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இதை தடுக்கும் வகையில் அவசர தேவைக்காக பெங்களூரு மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையை 100 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளும்படியும், அவ்வாறு அவசர உதவி கேட்பவர்களுக்கு ஒய்சாலா ரோந்து வாகனம் மூலம் போலீசார் வந்து உதவிக்கரம் நீட்டுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சமீபகாலமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பால் வேண்டும், பழங்கள் வேண்டும், சொந்தக்காரர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக்கூறி உதவி கோரி நூதன அழைப்புகள் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய ஒருவர், நான் வழக்கமாக இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, பழம் சாப்பிடுவது வழக்கம். தற்போது ஊரடங்கு உத்தரவால் என்னால் வெளியே சென்று பழம் வாங்க முடியவில்லை. எனவே, நீங்கள் (போலீசார்) வந்து பழம் வாங்கி தருவீர்களா?. இல்லை நானே போய் வாங்கிக்கொள்ளவா? என கேள்வி கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.

2-வது சம்பவமாக, 75 வயது நிரம்பிய காந்தம்மா என்ற மூதாட்டி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். அவர், நான் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே அவரது வீட்டுக்கு ஒய்சாலா வாகனத்தில் போலீசார் விரைந்துள்ளனர்.

அங்கு சென்ற போலீசாருடன், நான் மல்லேசுவரத்தில் உள்ள மகள் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிருப்தி அடைந்த போலீசார், மூதாட்டி என்பதால், வேறுவழியில்லாமல் காந்தம்மாவை மல்லேசுவரத்தில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுள்ளனர்.

அதுபோல் ஒரு திருமணமான பெண், தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அந்த பெண், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். அப்போது நடந்த சம்பவத்தை கூறி விட்டு நான் எனது கணவருடன் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை. எனவே வீட்டுக்கு செல்ல ஒய்சாலா வாகனத்தை அனுப்பும்படி கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், பெண்ணுக்கு அறிவுரை கூறி கணவருடன் மோட்டார் சைக்கிளில் செல்ல அறிவுறுத்தினர். இதுபோன்ற நூதன அழைப்புகள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் குறைந்தது 20-க்கும் மேற்பட்ட வினோத அழைப்புகள் வருவதாகவும், இதனால் போலீசார் திண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், அவசர தேவைக்காக மட்டுமே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.