செய்திகள்

தஞ்சையில் மினி பஸ்சில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

மினி பஸ்சின் படிக்கட்டியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை, வல்லம் அருகே உள்ள நல்லதண்ணி கிணறு சாலையைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் அய்யப்பன் (வயது 30).

இவர் கடந்த 12-ந் தேதி வல்லத்தில் இருந்து தஞ்சைக்கு மினி பஸ்சில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த படி சென்று கொண்டிருந்தார். அப்போது மேம்பாலம் அருகே மினி பஸ் செல்லும் போது எதிர்பாராத விதமாக பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பஸ் பயணிகள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அய்யப்பன் நேற்று இரவு இறந்தார்.

இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.