செய்திகள்

சசிகலாவுக்கு 35 வருடமாக நிம்மதியே இல்லை- திவாகரன் பேச்சு

சசிகலா துன்பத்திற்கு மேல் துன்பம் அடைந்துவருகிறார். 35 வருடமாக அவருக்கு நிம்மதியே இல்லை என்று ம.நடராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திவாகரன் பேசினார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சையில் நடந்த ம.நடராஜன் நினைவேந்தல்- படத்திறப்பு நிகழ்ச்சியில் சசிகலா சகோதரர் திவாகரன் பேசும் போது கூறியதாவது:-

நாங்கள் நடராஜன் அருகிலேயே இருந்ததால் அவருடைய அருமை எங்களுக்கு தெரியவில்லை. இப்போது அதை உணர்ந்து கொள்கிறோம். எனது சகோதரி சசிகலா திருமணமாகி வரும்போது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன்.

எனது தந்தைக்கு நான் எவ்வளவு பயந்தேனோ அதுபோன்று தான் அத்தான் நடராஜனுக்கும் பயந்தேன். அவர் எனக்கென்று தனி இடம் வைத்திருந்தார். அதை இன்று வரை நான் கடைபிடித்தேன். அவர் ஒரு மறைக்கப்பட்ட வரலாறு.

அவர் இறந்த பிறகு முள்ளி வாய்க்கால் முற்றத்தின் உள்ளே அவரது உடலை அடக்கம் செய்யலாம் என்று முடிவு எடுத்தோம். ஆனால் அது ஒரு டிரஸ்டு. அதற்கு பழ.நெடுமாறன் தலைவராக இருக்கிறார். அதனால் அவரிடம் சென்று அனுமதியெல்லாம் கேட்க வேண்டும். எனவே நாங்கள் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அவரது உடலை அடக்கம் செய்தோம். இன்று அவரது சமாதியில் 50 பேர் மொட்டை போட்டு கொண்டிருந்தனர். இதை பார்த்த பின்பு தான் தெரிகிறது. அவர் அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்தார் என்பது. நானும் திராவிட கழகத்தை சேர்ந்தவன் தான். எனது சகோதரி சசிகலா துன்பத்திற்கு மேல் துன்பம் அடைந்துவருகிறார். 35 வருடமாக அவருக்கு நிம்மதியே இல்லை. இப்போதும் அதுதான் தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews