கோப்புபடம் 
செய்திகள்

விலைவாசி உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து தர்மபுரியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் கியாஸ் சிலிண்டருக்கு வெங்காய மாலை அணிவித்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

தர்மபுரி:

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத்தலைவர் பூபதி தலைமை தாங்கினார்.

சங்க மாவட்ட செயலாளர் கிரைசாமேரி, நகர செயலாளர் நிர்மலா, ஒன்றிய நிர்வாகிகள் ரங்கநாயகி, தமிழ்மணி, சுசிலா, மாலா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

சமையல் கியாஸ் சிலிண்டர், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளா, புதுச்சேரி மாநிலங்களை போல் தமிழகத்தில் பண்டிகை கால சிறப்பு அங்காடிகளை தொடங்கி அத்தியாவசிய பொருட்களை அவற்றின் மூலம் வழங்க வேண்டும். பண்டிகை காலத்தில் வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களை கருத்தில்கொண்டு குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.7,500 நிவாரண உதவி வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு வெங்காய மாலை மற்றும் மலர் மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து விலைவாசி உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.