தர்மபுரி:
இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைசாமேரி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட நிர்வாகி சாமிநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொரோனா ஊரடங்கு கால பாதிப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு மாதமும் 10 கிலோ உணவு தானியங்கள் என அடுத்த 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். வருமானவரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் தலா ரூ.7500 வழங்க வேண்டும்.
நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு தொழிலாளர்கள் தொடர்பான அவசர சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாட்கள் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
நுண்நிதி நிறுவனங்களில், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன் தவணை வசூல் அனைத்தையும் ஒத்தி வைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.