தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவிகள் ஈவ்–டீசிங் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகிறது. இந்த பிரச்சினைகள் தொடர்பாக மாணவிகள் புகார் தெரிவிக்க வசதியாக தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புகார் பெட்டி வைக்கப்பட்டு சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த புகார் பெட்டியில் மாணவிகள் பல்வேறு புகார் மனுக்களை எழுதி போட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த புகார் பெட்டியை தர்மபுரி டவுன் போலீசார் திறந்து அதில் உள்ள புகார் மனுக்களை எடுத்து படித்தனர். இவற்றில் பெரும்பாலானவை ஈவ்–டீசிங் தொடர்பான புகார்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவிகள் புகார்கள் தெரிவிக்க வசதியாக புகார் பெட்டிகளை வைக்க போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தவிட்டார். ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் புகார் பெட்டிகளை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கூறுகையில், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்ட புகார் பெட்டியில் மாணவிகள் பல்வேறு புகார்களை தெரிவித்து உள்ளனர். இந்த புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியில் வைக்கப்படும் புகார் பெட்டிகளில் போடப்படும் புகார் மனுக்கள் அவ்வப்போது சேகரிக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும். மாணவிகள் தெரிவிக்கும் புகார்களில் உண்மை இருப்பது விசாரணையின் முடிவில் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.