தாராபுரம்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்பாண்டி(வயது26), ஸ்ரீவேலன் (28), சிவனேஷ் (25), கார் டிரைவர் ராஜபாண்டி (25) ஆகியோர் இன்று காலை நிலக்கோட்டையில் இருந்து திருப்பூருக்கு புறப்பட்டனர்.
கார் தாராபுரம்- திருப்பூர் நான்கு வழிச்சாலை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது கோவையில் இருந்து மதுரைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் எதிரே வந்தது. கோனாபுரம் பிரிவு என்ற இடத்தில் வந்தபோது பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் காரில் இருந்த சுரேஷ்பாண்டி, ஸ்ரீவேலன் ஆகியோர் தலை நசுங்கி பலியானார்கள். படுகாயத்துடன் சிவநேசன் உயிருக்கு போராடினார். பஸ் பயணிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிவநேசனும் பலியானார். கார் டிரைவர் ராஜபாண்டி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் தாராபுரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கார் முன் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியம் என்று எழுதப்பட்டுள்ளது. காருக்குள் மின் பழுது பார்க்கும் கருவிகள் சிதறி கிடந்தன.
எனவே பலியான 3 பேரும் மின்வாரிய ஊழியர்களாக இருக்கலாம் என்று போலீசார் கூறினர்.
பஸ் பயணிகள் மாற்றுப்பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் மணிவண்ணனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.