செய்திகள்

தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் நீட்டிப்பு?

தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இன்று நிறைவடையவுள்ள நிலையில் அவருக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை போலீஸ் கமி‌ஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உளவுப்பிரிவு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். காலியாக இருந்த சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவியையும் அவர் கூடுதலாக கவனித்தார்.

இன்றுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு பதில் புதிய டி.ஜி.பி. நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதே நேரத்தில் டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. தற்போது அது உறுதியாகியுள்ளது.

அவருக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. தற்போது உளவுப்பிரிவு டி.ஜி.பி.யாக இருக்கும் அவர் மாநில சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பணியை கூடுதலாகவே கவனிக்கிறார்.


இனி அவர் சட்டம்-ஒழுங்கு முழு நேர டி.ஜி.பி.யாக பணி அமர்த்தப்படுகிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

டி.ஜி.பி. அந்தஸ்தில் அர்ச்சனா ராமசுந்தரம், ராதாகிருஷ்ணன், மகேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ராதாகிருஷ்ணன் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். ஜார்ஜ் செப்டம்பர் மாதமும், அர்ச்சனா ராமசுந்தரம் அக்டோபரிலும் ஓய்வு பெறுகிறார்கள். மகேந்திரன் அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளார்.

டி.கே.ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதன் மூலம் இவர்கள் யாரும் இனி சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. ஆவதற்கு வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT