விமான சேவை 
செய்திகள்

வாரத்திற்கு 18,843 விமானங்கள் பறக்க டிஜிசிஏ ஒப்புதல்

கோடைக்கால அட்டவணையை கருத்தில் கொண்டு மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அக்டோபர் மாதம் வரை அதிகமான விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

கொரோன வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. சுமார் இரண்டு மாதங்கள் கழித்து மே 25-ந்தேதி மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது.

முதலில் 33 சதவீத விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக 80 சதவீத சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கோடைக்கால அட்டவணைக்காக வாரத்திற்கு 18,843 விமானங்கள் பறக்க விமான ஒழுங்குமுறை ஆணையம் டிஜிசிஏ அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சேவை மார்ச் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அக்டோபர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை நடைமுறையில் இருக்கும்.

பரேலி, பிலாஸ்புர், குர்னூல், ருபாசி ஆகிய புதிய விமான நிலையங்கள் உள்பட 108 விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் செல்லும்.

இண்டிகோ நிறுவனம் வாரத்திற்கு 8749, ஸ்பைஸ்ஜெட் 2854, கோஏர் 1747, ஏர்இந்தியா 1683, விஸ்டாரா 1288, ஏர்ஏசியா இந்தியா 1243 விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.