செய்திகள்

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: ரூ.4 கோடி உண்டியல் வசூல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடி கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலை மலர்

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நேற்றும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திக்கு வந்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 29 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். நேற்று காலை 9 மணியில் இருந்து இரவு 7 மணிவரை 63 ஆயிரத்து 215 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 16 மணிநேரம் ஆனது.

அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன பக்தர்களுக்கு 5 மணிநேரமும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்களுக்கு 4 மணி நேரமும் ஆனது. ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடி கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு 300 ரூபாய் கட்டணத்தில் பிரத்யேக பிரவேச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. 300 ரூபாய் டிக்கெட்டை தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் பரிசோதனை செய்து, கோவிலுக்குள் அனுப்பி வைக்கின்றனர்.

அதேபோல் நேற்று 14 பக்தர்கள் 300 ரூபாய் டிக்கெட்டில் ஏழுமலையானை வழிபட வந்தனர். அவர்கள் கொண்டு வந்த 300 ரூபாய் டிக்கெட் போலியானது எனச் சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த டிக்கெட்டை வாங்கி கொடுத்த இடைத்தரகர்கள் 2 பேரை திருமலை-திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து, திருமலை 1-டவுன் போலீசில் ஒப்படைத்தனர். திருமலை போலீசார், அந்த 2 பேரை கைது செய்து, அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 14 பக்தர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரிசனத்துக்கு அனுப்பி வைத்தனர்.