சென்னை உயர்நீதிமன்றம் 
செய்திகள்

தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசாணையை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

உலக வேளாளர் சங்கம் அரசாணைக்கு தடைக்கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 7 பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு 7 பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் வகையில் அரசாணை பிறப்பித்தது. மத்திய அரசும் இதை ஏற்றுக் கொண்டது.

இந்த அரசாணைக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உலக வேளாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக,

பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் உள்ளிட்ட சாதியினர் தங்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைக்க வேண்டும் என புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆனால் சைவ வேளாளர்கள், கொங்கு வேளாளர்கள் உள்ளிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலர் மேற்குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்களை தேவேந்திரகுல வேளாளர் பெயரில் குறிப்பிடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இதனால் இந்த கோரிக்கை நிறைவேறாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.

இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, கடந்த ஆண்டு நவம்பரில் அறிக்கை அளித்தது. இந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின், சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியானது.