செய்திகள்

தேவகோட்டை: சொத்து பிரச்சினையில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு மகன் உள்பட 2 பேர் கைது

தேவகோட்டை அருகே சொத்து பிரச்சினையில் பெண்ணுக்கு அரிவாளால் வெட்டிய மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டை:

தேவகோட்டை அருகே உள்ள களபாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மீனாள் (வயது68). இவர்களது மகன் குமார் (40).

கடந்த சில மாதங்களாகவே குமார் தனக்குரிய சொத்தை பிரித்து தருமாறு பெற்றோருடன் வற்புறுத்தி வந்துள்ளார். அவர்கள் மறுக்கவே குமார் அடிக்கடி பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று இரவு குமார் தனது சித்தப்பா மணிவண்ணனுடன் சென்று தாய் மீனாளிடம் சொத்து குறித்து மீண்டும் பிரச்சினை செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாய் என்றும் பாராமல் மீனாளை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வேலாயுதபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா பிளவர், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குமார் மற்றும் மணிவண்ணனை கைது செய்தனர்.