தொழிலாளி மரணம் 
செய்திகள்

தேவதானப்பட்டியில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மகாராஷ்டிரா தொழிலாளி பலி

தேவதானப்பட்டியில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மகாராஷ்டிரா தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 688 பேர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு 21 சிறப்பு பஸ்கள் மூலம் மதுரை ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் தேவதானப்பட்டி முகாமில் இருந்த தனது குடும்பத்தினருடன் பஸ்சில் சென்ற தொழிலாளி சிவாஜி ராம் (வயது 55) செங்குளத்துப்பட்டி பிரிவு பகுதியில் வெளியே எச்சில் துப்ப முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சிவாஜிராம் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தேனியிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.