ஐதராபாத்:
மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக பள்ளிகளில், பாடத்திட்டத்துடன், சிறப்பு வகுப்புகளும் கூடுதலாக நடத்தப்படுகின்றன. இதனால் பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் கருவிகள் என மாணவர்களின் புத்தகப்பைகள் நிரம்பி வழிகின்றன. அதிக எடை கொண்ட இந்த புத்தகப்பைகளை மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துடனேயே சுமந்து செல்கின்றனர். மாணவ-மாணவிகளின் இந்த சிரமத்தை போக்க தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. மாணவர்களின் வகுப்பு அடிப்படையில் அவர்களின் புத்தகங்களுடன் கூடிய பைக்கான எடையளவை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகப்பை 1½ கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது.
3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2-லிருந்து 3 கிலோ வரையே எடை இருக்க வேண்டும். 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக 4 கிலோ வரையும், 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 4½ கிலோ வரையும் எடை இருக்கலாம். 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை 5 கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது எனவும் அரசின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.