செய்திகள்

உடுமலை வனப்பகுதியில் கஞ்சா செடிகள் தீ வைத்து அழிப்பு

உடுமலை வனப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 1000 கஞ்சா செடிகள் தீ வைத்து அழிக்கப்பட்டன.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், புள்ளி மான், கடமான்கள், காட்டுப்பன்றி, காட்டெருமை, கரடிகள், கருமந்தி, குரங்குகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

மேலும் இந்த இரு வனசரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மேல்குருமலை, குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, கோடந்தூர், தளிஞ்சி, பொறுப்பாறு, தளிஞ்சி வயல், கரட்டுப்பதி, பூச்சக்கொட்டாம் பாறை, வசம் குளம் உள்பட 18 மலைவாழ் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருந்தாலும், தேன் எடுத்தல், தைலம் காய்ச்சுதல், பழங்களை பறித்து விற்பனை செய்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல் போன்ற சுயதொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் 2 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உடுமலை வனப்பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததும், அங்கு கஞ்சா பயிர்களை சாகுபடி செய்து, அவற்றை விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனால் உஷாரான வனத்துறையினர் கடந்த சில நாட்களாக உடுமலை வனப்பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ள இடங்களை தேடி சென்று ஒவ்வொரு மலைவாழ் குடியிருப்பு பகுதியாக ஆய்வு மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் மாவட்ட வன அலுவலர் முகம்மது சபாப் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள், உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தளி பிரிவு குருமலை பகுதிக்கு சென்ற போது, குருமலையின் சுற்றுப்பகுதியில் மர்ம நபர்கள் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த சிறிய மற்றும் பெரிய அளவிலான சுமார் 1,000 கஞ்சா செடிகளை வனத்துறையினர் வெட்டினார்கள். பின்னர் அவற்றை பாதுகாப்பாக ஒரு இடத்தில் மொத்தமாக போட்டு தீ வைத்து எரித்து அழித்தனர்.

இந்த பணியில் அமராவதி மற்றும் காங்கயம் வனச்சரக அலுவலர்கள் நவீன்குமார், மாரியப்பன், முருகேசன் உள்பட வனவர்கள், வனக் காப் பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.