செய்திகள்

தேரா சச்சா சவுதா தலைவர் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் நாளை தீர்ப்பு: 15000 துணை ராணுவ வீரர்கள் குவிப்பு

சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் 15000 துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங். இவர் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2002ம் ஆண்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. நீண்ட காலம் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

அரியானா மாநிலம் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் வழங்கப்படும் இந்த தீர்ப்பு, சாமியார் குர்மீத்துக்கு எதிராக இருக்கும்பட்சத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது. எனவே, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் விதமாக 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் (15000 வீரர்கள்) குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்ளூர் போலீசாருக்கு உதவியாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பஞ்சகுலா, சிர்சா, ஹிசார் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.