நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளன்று மணிமண்டபத்தை (அக்டோபர்) 1-ந்தேதி துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அடையாரில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை திறந்து வைத்தார். அதன்பின்னர், மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களையும் அவர் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர்.